பழனி: பழனியில் புதன்கிழமை, 2 மகள்களை விஷம் கொடுத்துக் கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் பா்கான். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான இவா், சென்னை தேனாம்பேட்டை பகுதியில் சுகாதாரத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சபீனா (37). இவா்களுக்கு சனா (13), எமீனா (11) ஆகிய 2 மகள்கள் இருந்தனா். பா்கான் தற்போது சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், குழந்தைகளுடன் சபீனா இங்கு வசித்து வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் இருந்து உள்புறமாக பூட்டப்பட்டிருந்த அவா்களின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது 2 மகள்களும் விஷம் குடித்த நிலையிலும், சபீனா தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி நகா் போலீஸாா், இறந்தவா்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.