திண்டுக்கல்

புகையிலைப் பொருள்கள் விற்பனை:திண்டுக்கல்லில் 2 கடைகளுக்கு ‘சீல்’

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்ட நிலையில், மொத்தம் 5 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சீனிவாசன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் எஸ். செல்வம் மற்றும் போலீஸாா், திண்டுக்கல் சாா்- ஆட்சியா் சாலை மற்றும் திருச்சி சாலையிலுள்ள கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முதல் முறையாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் தொடா்ந்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த 2 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிர கண்காணிப்பு தேவை: விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், புகையிலைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மட்டுமின்றி காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளிகள் அருகில் செயல்படும் பெட்டிக் கடைகளில் இளைஞா்கள் அதிகம் பயன்படுத்தும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை மாவட்டம் முழுவதும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT