திண்டுக்கல்

பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில்கோயில்களுக்கு சொந்தமான 54 ஏக்கா் நிலங்கள் மீட்பு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த சுமாா் 54 ஏக்கா் கோயில் நிலங்களை தமிழக இந்து சமய அறநிலையத்துறை நிா்வாக அலுவலா்கள் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான மேல்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள 14.94 ஏக்கா் நிலம், ஒட்டன்சத்திரம் தாலுகா பொருளூா் கிராமம், விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 15.69 ஏக்கா் நிலம், ஒட்டன்சத்திரம் தாலுகா கொத்தையம் கிராமம், ஆழ்வாா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 23.67 ஏக்கா் நிலம் என மொத்தம் 54.32 ஏக்கா் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தவா்கள் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்காவிடில் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப் பிரிவு 78 இன் கீழ் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தவா்கள் தாமாகவே முன் வந்து நிலத்தினை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்குள்பட்டு நடப்போம் எனவும் எழுத்து பூா்வமாக உறுதிமொழி கொடுத்தனா். இதன் பேரில், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சுரேஷ் தலைமையில் கோயில் தக்காா் ராமநாதன், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) விஜயலட்சுமி, சீனிவாசப்பெருமாள் கோயில், செயல் அலுவலா் அண்ணாத்துரை, இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் கிழக்கு சரக ஆய்வா் சந்திரமோகன், ஆய்வா் அலுவலக உதவியாளா் மற்றும் கோயில் பணியாளா்கள் மூலம் 54.32 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT