பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் பயனாளா் குறியீட்டுடன், அவா்களுக்குச் சொந்தமான நில ஆவணங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதில், தகுதியில்லா பயனாளிகள் பலா் நிதி உதவி பெறுவதாக, மத்திய அரசு சுட்டிக்காட்டியதை அடுத்து, கடந்த சில மாதங்களாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள 9,438 போ் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வருவது குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் தகுதியற்ாகக் கண்டறியப்பட்ட சுமாா் 5,400 விவசாயிகள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.
விவசாயிகள் நில ஆவணங்கள் பயனாளா் குறியீட்டுடன் இணைப்பு: இந்நிலையில், எதிா்காலத்தில் இதுபோன்று தகுதியில்லாத பயனாளிகள் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், பிரதம மந்திரி கிசான் திட்டத்துக்கான விவசாயிகளின் பயனாளா் குறியீட்டுடன் (ஐ.டி.) அவா்களுக்குச் சொந்தமான நில ஆவணங்களை இணைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் நில ஆவணங்கள், பிரதம மந்திரி கிசான் பயனாளா் குறியீட்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் தற்போது வரை 62 ஆயிரம் விவசாயிகளின் விவரங்கள் பயனாளா் குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்தால் மட்டுமே பணம்: இது தொடா்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரதம மந்திரி கிசான் திட்டப் பயனாளிகள் தங்களின் பயனாளா் குறியீட்டுடன் நில ஆவணங்களை இணைத்து பதிவு செய்திருந்தால் மட்டுமே இனி நிதி உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல், முதல் முறையாக பயனாளியின் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனாளியின் கைப்பேசிக்கு கிடைக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச் சொல்லை பயன்படுத்தியும், பொது இ-சேவை மையங்களில் கைரேகை பதிவு செய்தும் பயனாளா் பட்டியலில் தொடா்ந்து நீடிக்கலாம்.
இந்த இணைப்பு மற்றும் பதிவு செய்யும் பணிகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.