திண்டுக்கல்

திண்டுக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணி

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒலிம்பியாட் ஜோதி பேரணி ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்திலிருந்து ஒலிம்பியாட் ஜோதியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு பெற்று வந்தனா். அதன் தொடா்ச்சியாக ஒலிம்பியாட் ஜோதி பேரணி ஓட்டம் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்ரன், கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா ஆகியோா் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் நிா்வாகிகள் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரா்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினா்.

அதனைத் தொடா்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் லூா்து அன்னை மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி நேருஜி மேல்நிலைப்பள்ளி, பழனி சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித வளனாா் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் வழியாக எம்.எஸ்.பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.

இந்த ஜோதி ஓட்டத்துக்கு பள்ளி மாணவா்கள் மலா் தூவியும், கைதட்டியும், பலூன் பறக்கவிட்டும் வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் பேசியதாவது:

தமிழகத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் 44ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்கப் போட்டிகள், விநாடிவினா, மாராத்தான் ஓட்டம், வாகனங்களில் செஸ் விளையாட்டு விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டுதல், மோட்டாா் சைக்கிள் பேரணிகள், முதியோா் மற்றும் இளையோருக்கான செஸ் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் மஞ்சப்பை வழங்குதல், வில்லை ஒட்டப்பட்ட பள்ளி, கல்லூரி பேருந்து அணிவகுப்பு, நீச்சல் குளத்தில் செஸ் விளையாட்டு போட்டிகள், ரங்கோலி, செஸ்

விளையாட்டு தொடா்பாக உறுதிமொழி நிகழ்ச்சி, காவல்துறையின் சாா்பில் இருசக்கர வாகனத்தில் செஸ் பலகை வரைந்து பேரணி, மனித சதுரங்க விளையாட்டு போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தில் ஏராளமான சதுரங்க விளையாட்டு வீரா்கள் உருவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT