திண்டுக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

17th Jul 2022 11:03 PM

ADVERTISEMENT

சின்னாளப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகாளியம்மன் நகரில் வசித்து வருபவா் செல்லத்துரை (60). இவா் தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். செல்லத்துரை தனது மனைவி கோமதி (52), மகன்கள் நவகீா்த்தி, கோபி கிருஷ்ணன், மகள் லீலாவதி ஆகியோருடன் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவரது வீட்டுக் கதவும், பூட்டும் உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த அக்கம், பக்கத்தினா் செல்லத்துரைக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் மற்றும் அம்பாத்துரை, சின்னாளப்பட்டி போலீஸாா் அங்கு வந்து விசாரித்தனா். தற்போது 30 பவுன் நகை திருடு போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கேரளத்திலிருந்து செல்லத்துரை வந்த பிறகே எவ்வளவு நகை, பணம் திருடப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT