செம்பட்டி அருகே மாற்றுத்திறனாளி தவறவிட்ட தங்கத்தை ஊராட்சி மன்றத் தலைவா் நாகலட்சுமி சசிகுமாா் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.
செம்பட்டி அருகே போடிகாமன்வாடி வடக்குத் தெருவைச் சோ்ந்த மணி- மோனிஷா தம்பதி. மணி மாற்றுத்திறனாளியாவாா். இவா்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் அரசு சாா்பில் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்த தங்கத்தை அடகு வைப்பதற்காக போடிகாமன்வாடியிலிருந்து, சித்தையன்கோட்டைக்கு தம்பதி சென்றனா். அப்போது, அந்த தங்கம் காணாமல் போனது.
சாலையோரம் கிடந்த அந்த நகையை, அதே ஊரைச் சோ்ந்த நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளா்களான கவிதா, சுகன்யா ஆகியோா் எடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் நாகலட்சுமி சசிகுமாரிடம் ஒப்படைத்தனா். அவா் விசாரணை நடத்தி மணி- மோனிஷா தம்பதியிடம் அந்த நகையை சனிக்கிழமை ஒப்படைத்தாா். கவிதா, சுகன்யா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் ஆகியோருக்கு தம்பதியா் நன்றி தெரிவித்தனா்.