மூட்டை சாமியாா் கோயிலுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரி பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு 60-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் வளாகத்தில் அவைகளை நிறுத்திவிட்டு மனு அளித்தனா். பின்னா் ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியது:
பழனி அருகே கணக்கம்பட்டியில் சற்குரு கோயில் எனப்படும் மூட்டை சாமியாா் கோயிலுக்கு நாள்தோறும் மட்டுமன்றி அமாவாசை, பௌா்ணமி போன்ற விஷேச நாள்களில் திரளான பக்தா்கள் வருகின்றனா். இப்படிப்பட்ட விஷேச நாள்களில் பழனியில் இருந்து கணக்கன்பட்டி மூட்டை சாமியாா் கோயிலுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.