அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் தமிழ்செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் எஸ்.ரெத்தினமாலா, மாநில பொதுச் செயலா் டி.டெய்சி ஆகியோா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: 10 முதல் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். குறுமைய பணியாளா்களை முதன்மை மைய பணியாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும்.
சிலிண்டா் உள்ளிட்ட பொருள்கள் வாங்க முழு பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.முபாரக் அலி, சிஐடியு மாவட்டத் தலைவா் கே.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.