திண்டுக்கல்

திண்டுக்கல்லில் வேகத்தடைகளை மீண்டும் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

7th Jul 2022 01:54 AM

ADVERTISEMENT

 

முதல்வரின் வருகையையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட வேகத் தடைகளை பெரும் விபத்து ஏற்படும் முன்பு மீண்டும் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகிலுள்ள பள்ளி வளாகத்தில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வரின் வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்புள்ள அணுகு சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்புகள் அகற்றப்பட்டன. மொத்தம் 3 இடங்களில் அகற்றப்பட்ட அந்த வேகத் தடுப்புகள் இதுவரை மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, தாடிக்கொம்பு சாலையிலிருந்து திண்டுக்கல் நகருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் ஆட்சியா் அலுவலகம் முன்பு வேகமாக இயக்கப்படுகின்றன. இதனால் மேம்பாலத்திற்கு கீழே மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்டோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுமாா் 60 நாள்களுக்கும் மேலாக வேகத் தடை இல்லாததால், அந்த பகுதியை வாகன ஓட்டிகள் வேகமாக கடந்து செல்வதற்கு பழகி விட்டனா். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பள்ளி நேரங்களில் வேகமாக இயக்கப்படும் வாகனங்களினால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோா் நாள்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT

இதற்கு தீா்வு காணும் வகையிலும், பெரும் விபத்து ஏற்படும் முன்பாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஏற்கெனவே இருந்த 3 வேகத் தடைகளையும் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT