பழனியில் பெண்ணை கேலி செய்த பிரச்னையில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் நரிக்குறவா் சமூகத்தினா் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா். திங்கள்கிழமை இரவு கடைக்கு பொருள்கள் வாங்க சென்ற அந்த சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் மதுபோதையில் இருந்த இளைஞா்கள் அத்துமீறி நடந்துள்ளனா்.
இதுகுறித்து பெண்ணின் உறவினா்கள் இளைஞா்களிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் தங்களது இன பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி நரிக்குறவா் சமூகத்தினா் பழனி வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அவா்கள் தங்களது ஆதாா் அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த பழனி நகா் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சிலா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள மற்றவா்களை விரைவில் கைது செய்து விடுவோம் என்றும் கூறினா். இதைத் தொடா்ந்து நரிக்குறவா் சமூகத்தினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.