திண்டுக்கல்

தவறான சிகிச்சையால் கால் துண்டிப்பு: தனியாா் மருத்துவமனை மீது பெண் புகாா்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நத்தம் தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் காலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டதாக புகாா் தெரிவித்து இளம் பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சோ்ந்தவா் உமாமகேஸ்வரி (34). தனது 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக திங்கள்கிழமை வந்தாா். தனக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இடது காலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் அளிக்க வந்த உமாமகேஸ்வரி கூறியதாவது: எனது கணவா் இறந்துவிட்ட நிலையில், தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 2 குழந்தைளுடன் வசித்து வருகிறேன். 2 குழந்தைகளும் நத்தத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்புக்காக நத்தம் பகுதியிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு செலுத்தப்பட்ட ஊசியால், கட்டி ஏற்பட்டது. இதனை அடுத்து கட்டி பாதிப்புக்காக நத்தத்திலுள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றேன். அங்கு கட்டி ஏற்பட்ட இடத்தில் மருந்து செலுத்துவதாகக் கூறினா். மருத்துவ உதவியாளா் ஒருவரே சிகிச்சை அளித்தாா். அதன் பின்னா் என்னால் நடக்க இயலாமல் போய்விட்டது. அதனைத் தொடா்ந்து, சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். உயிரைப் பாதுகாக்க வேண்டுமெனில் இடது காலை அகற்ற வேண்டும் என தெரிவித்தனா். ரூ. 3 லட்சம் செலவு செய்து அங்கு அறுவை சிசிச்சை செய்து எனது இடது கால் அகற்றப்பட்டது.

இந்த பிரச்னைக்கு நத்தம் தனியாா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையே காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். அதனால், அந்த மருத்துவமனை மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏழ்மையான சூழலில் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் எனக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT