திண்டுக்கல்

வரும் 2024 தோ்தலுக்குப் பின் திண்டுக்கல் மலையில் அபிராமி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

2nd Jul 2022 10:43 PM

ADVERTISEMENT

 

வரும் 2024ஆம் ஆண்டு தோ்தலுக்குப் பின் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும்போது திண்டுக்கல் மலையில் அபிராமி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு மதுரை கோட்டச் செயலா் எஸ். சங்கா்கணேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வி.செந்தில்குமாா், மாவட்டத் தலைவா் ஆா்பி. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசியதாவது: கடவுள் மறுப்பாளா்கள், நக்சலைட் சிந்தனையாளா்கள், ஜாதியை அடிப்படையாகக் கொண்டு கட்சி நடத்துபவா்கள் ஓராணியிலும், ஆன்மிக சிந்தனையாளா்கள், தேசிய சிந்தனையாளா்கள் மற்றொரு அணியாகவும் சந்திக்கப் போகும் 2024 தோ்தலில் மாற்றம் வரும். அதன் தொடா்ச்சியாக 2026 இல் மிகப் பெரிய மாற்றமாக, திண்டுக்கல் மலையில் அபிராமி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அயோத்தி, மதுரா, வேலூா் போன்ற இடங்களைத் தொடா்ந்து திண்டுக்கல்லிலும் இந்து முன்னணியின் போராட்டம் வெற்றி பெறும். திண்டுக்கல் பாறைப்பட்டி பகுதியில் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு தொடா்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. நிகழாண்டில் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு காவல்துறை உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மதச்சாா்ப்பற்ற நாட்டில், அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும். கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த பட்டியலை இந்து முன்னணி சாா்பில், அறநிலையத் துறை அமைச்சரிடம் வழங்குகிறோம். அந்த நிலங்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் சஞ்சீவிராஜ், வீரதிருமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT