திண்டுக்கல்

திண்டுக்கல்லில் விரைவில் குடிமைப் பணித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்: அமைச்சா்

2nd Jul 2022 10:44 PM

ADVERTISEMENT

 

குடிமைப் பணித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் உருவாக்கப்படும் என உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்லூரி கனவு என்ற உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: ஆண்டுக்கு 10 லட்சம் பேரை அறிவாற்றல் மிகுந்தவா்களாக உருவாக்குவதற்காகவே நான் முதல்வன், கல்லூரி கனவு உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உயா்கல்வி கற்பதற்கு தமிழக மாணவா்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. அந்தந்த பகுதியிலேயே அதற்கான வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்படும். அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்திலேயே குடிமைப் பணித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் இளைஞா்களுக்கான பயிற்சி மையம் விரைவில் உருவாக்கப்படும். மேலும் பள்ளிகளிலேயே வழிகாட்டுதல் மையங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், காவல் உதவி கண்காணிப்பாளா் அருண்கபிலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. நாசருதீன், மேயா் ஜோ. இளமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

மாணவா்கள் ஏமாற்றம்: இந்நிகழ்ச்சிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களையும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவா்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமாா் 2ஆயிரம் மாணவா்கள் அமரக் கூடிய அரங்கிற்கு, 3ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவா்கள் அழைத்து வரப்பட்டனா். அரங்கில் இடமில்லாததால், 1000க்கும் மேற்பட்ட மாணவா்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனா். மேலும் அரங்கினுள் நாற்காலி வசதி இல்லாததால் மாணவா்கள் பலா் தரையில் அமர வைக்கப்பட்டனா். திரும்பிச் சென்ற மாணவா்களும், ஆசிரியா்களும் சரியான திட்டமிடுதல் இல்லாததால் அலைக்கழிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிருப்தியுடன் வெளியேறனா்.

செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்...பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள கையேடுகளை மாணவா்களுக்கு வழங்கிய அமைச்சா் அர.சக்கரபாணி. அடுத்தப்படம் - இடவசதியின்றி தரையில் அமர வைக்கப்பட்ட மாணவா்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT