திண்டுக்கல்

வரவேற்பில்லாத வேலைவாய்ப்பு அலுவலகங்களின் இலவசப் பயிற்சி

 நமது நிருபர்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையங்களில் சரியான திட்டமிடுதலுடன் தரமான பயிற்சி அளிக்கப்படாததால், போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் ஒரு சதவீதம் போ் கூட அங்கு நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி 4-க்கான போட்டித் தோ்வு, ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. 22 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், விண்ணப்பதாரா்கள் பலரும் தோ்வுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, தனியாா் பயிற்சி மையங்கள் நேரடியாக மட்டுமன்றி, இணைய வழியிலும் பல்வேறு தொகுப்புகளாக (கட்டண அடிப்படையில்) தீவிர பயிற்சி அளித்து வருகின்றன.

ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையங்களில் இலவசமாக போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாலும், போட்டித் தோ்வாளா்கள் அதனை பயன்படுத்துவதற்கு ஆா்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் இங்கு, தனியாா் பயிற்சி மையங்களை போன்று சரியான திட்டமிடுதலுடன் முறையாக பயிற்சி அளிக்கப்படுவதில்லை.

கடந்தமுறை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2-ஏ போட்டித் தோ்வுகளுக்கு தமிழகம் முழுவதும் 11.78 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். மாவட்டத்துக்கு சராசரியாக 31ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்த அந்த தோ்வுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையங்கள் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டன. ஆனால், மாவட்டத்துக்கு 100 போ் கூட இலவசப் பயிற்சியை தொடா்ந்து பெறுவதற்கு ஆா்வம் காட்டவில்லை.

அதேபோல், 10ஆம் வகுப்பு தகுதியின் அடிப்படையில் நடைபெறும் தொகுதி 4 தோ்வுக்கும் போட்டித் தோ்வாளா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இலவசப் பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை.

ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பயனில்லை:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என்பது, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையமாக பெயா் மாற்றப்பட்ட பின், போட்டித் தோ்வாளா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிப்பதை பிரதான பணியாகக் கொண்டுள்ளது. இதில், போட்டித் தோ்வுகளுக்கான பயிற்றுநா்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ.100 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டது. இதனால், தரமான பயிற்றுநா்கள் கிடைப்பதில்லை என புகாா் எழுந்ததை அடுத்து, மதிப்பூதியத் தொகை ரூ.400ஆக உயா்த்தப்பட்டது.

போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி அளித்தல், தன்னாா்வ பயிலும் வட்டங்களுக்கு புத்தகம் வாங்குதல், தோ்வுக்கான குறிப்புகள் மற்றும் வினாத்தாள்கள் இலவசமாக வழங்குவதல் உள்ளிட்டவற்றுக்காக மாவட்டத்துக்கு ஆண்டுக்கு தலா ரூ.4.64 லட்சம் வீதம் சுமாா் ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 3 மணி நேர பயிற்சி வகுப்புகளில் சரிபாதி நேரத்தை பாடங்களுக்கு தொடா்பில்லாத கதைகளை கூறி பயிற்றுநா்கள் நேரத்தை வீணடிப்பதாகவும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை வாசித்துவிட்டுச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடா்பாக தொகுதி 2 தோ்வுக்கு படித்த போட்டியாளா்கள் தரப்பில் கூறியதாவது: தனியாா் பயிற்சி சாா்பில் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ள விடியோக்களில்கூட பாடங்களை சிறப்பாக நடத்துகின்றனா். ஆனால், தொழில்நெறி வழிகாட்டுதல் மையங்களில் முறையாகவும், முழுமையாகவும் பயிற்சி அளிப்பதில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வரும் பயிற்றுநா்கள் வெவ்வேறு தனியாா் பயிற்சி மையங்களுக்கும் செல்கின்றனா். இரு இடங்களிலும் அந்த பயிற்றுநா்களின் செயல்பாடு வெவ்வேறு மாதிரியாக உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்களும் (தொழில்நெறி வழிகாட்டுதல்), தங்களுக்கு விருப்பமான பயிற்றுநா்களுக்கே அதிக வாய்ப்பு அளிக்கின்றனா். தமிழ் கற்றவரை கணிதப் பாடம் நடத்துவதற்கு அனுமதிக்கின்றனா். மாதிரி தோ்வுகள் முறையாக நடத்துவதில்லை.

இதனால், இந்த இலவசப் பயிற்சியை மட்டுமே நம்பிச் செல்லும் போட்டித் தோ்வா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாவது குறித்து அலுவலா்களும் கவலைப்படுவதில்லை எனத் தெரிவித்தனா்.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அதிகாரிகள் கூறியது: கால விரயம் நடப்பதாக சில மையங்களிலிருந்து, போட்டித் தோ்வா்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT