திண்டுக்கல்

பழனியை வந்தடைந்தது இடைப்பாடி காவடிக் குழு: ஆயிரம் கிலோ மலா்களால் பூக்கோலம்

27th Jan 2022 12:56 AM

ADVERTISEMENT

தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான இடைப்பாடி பக்தா்கள் காவடிக் குழுவினா் பாதயாத்திரையாக பழனியை வந்தடைந்தனா். மலைக்கோயில் மேற்கு பிரகாரத்தில் பக்தா்கள் சுமாா் ஆயிரம் கிலோ மலா்களால் பூக்கோலம் வரைந்தனா்.

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு இடைப்பாடி பக்தா்கள் கூட்டம் வருவது தனிச்சிறப்பாகும். கடந்த ஜன.17 ஆம் தேதி இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊா்களிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட இடைப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் காவடிக்குழுவினா் புதன்கிழமை அதிகாலை மானூா் சண்முகநதியை வந்தடைந்ததனா். அங்கு காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்தப்பட்டு பிற்பகல் 12 மணியளவில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்தனா். இடைப்பாடி காவடிகளுக்கு பழனிக் கோயில் சாா்பில் தீபாராதனை காட்டப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னா் காவடிகள் நான்கு ரதவீதிகள், கிரிவீதி சுற்றி மலைக்கோயிலுக்கு சென்றன.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் மயில்காவடி, இளநீா்காவடி, அலங்காரகுடைகளுடன் ஊா்வலமாக வந்ததை ஏராளமான பக்தா்கள் ஆா்வமுடன் பாா்த்தனா்.

பருவதராஜகுல பழனி படித்திருவிழாக்குழு சாா்பில் மலைக்கோயில் வெளிப்பிகாரத்தில் 52 ஆவது ஆண்டாக ஒம்கார தீப தரிசனத்துக்காக சுமாா் ஆயிரம் கிலோ மலா்கள் கொண்டு மலா்க்கோலம் வரையப்பட்டிருந்தது. மேலும் மலைக்கோயில் படிகளுக்கு மலா் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இரவு மலைக்கோயிலிலேயே தங்கும் பக்தா்கள், நாளை காலை அடிவாரம் வந்தடைகின்றனா். படித்திருவிழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவா் திருக்கை வேலுசாமி, செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் வெங்கடேஷ்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT