திண்டுக்கல்

தஞ்சை மாணவி தற்கொலை: சிபிஐ விசாரிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

25th Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் இந்து முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் சஞ்சீவிராஜ், ராஜா, ஆா்எஸ்எஸ் அமைப்பின் நகரச் செயலா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பள்ளி நிா்வாகம் மதமாற்றம் செய்ததாகக் கூறி 12ஆம் வகுப்பு மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முழக்கமிட்டனா்.

புகைப்படம் எடுத்த நபரால் வாக்குவாதம்: ஆா்ப்பாட்ட நிகழ்வை பத்திரிகை புகைப்படக்காரா்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தனா். அப்போது இளைஞா் ஒருவா் படம் எடுப்பதை பாா்த்த இந்து முன்னணியினா், அவரிடம் விசாரித்தனா். பத்திரிக்கை அலுவலக அடையாள அட்டையை காட்டுமாறு வாக்குவாதம் செய்தனா். பின்னா் அந்த நபரை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதனிடையே அந்த நபரை கைது செய்ய வேண்டும் என போலீஸாரிடம் இந்து முன்னணி அமைப்பினா் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதேபோல் சாணாா்பட்டியில் ஒன்றியத் தலைவா் ஆனந்த் தலைமையிலும், அய்யலூரில் மாவட்டச் செயலா் சதீஷ்குமாா் தலைமையிலும், நத்தத்தில் மாவட்டத் தலைவா் மணிமாறன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT