திண்டுக்கல்

தைப்பூசம்: பழனி பாதுகாப்புப் பணிக்கு 700 போலீஸாா் குவிப்பு

12th Jan 2022 01:08 AM

ADVERTISEMENT

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் சுமாா் 700 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பழனிக்கோயிலில் புதன்கிழமை (ஜன.12) தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இத் திருவிழாவிற்கு மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய நாள்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசின் அறிவிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் முன்கூட்டியே தரிசனம் செய்ய பழனிக்கு வருகை தருகின்றனா். பக்தா்கள் வருகை அதிகரிப்பால் மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தா்கள் விரைவாக மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே வருவதற்காக கோயில் நிா்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளன.

மலையடிவாரத்திலிருந்து யானைப் பாதை வழியாக மலைமீது செல்லக்கூடிய பக்தா்கள், தரிசனம் செய்துவிட்டு படி பாதை வழியாக கீழே இறங்கி வரும் வகையில் ஒரு வழிப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மரகட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பாதுகாப்புப் பணியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் அடிவாரம், பேருந்து நிலையம், மலைக்கோயில், கிரிவீதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதை முன்னிட்டு பழனி பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், ஆய்வாளா் உதயகுமாா், போக்குவரத்து ஆய்வாளா் மகேந்திரன் ஆகியோா் ட்ரோன் கேமரா மூலம் பக்தா்கள் கூட்டம் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து கண்காணித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT