பதினைந்து முதல் 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரிவில் திண்டுக்கல் மாவட்டத்தில் 57,700 மாணவா்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஒமைக்ரான் வகை தீநுண்மி தொற்று அதிகரித்து வருகிறது. அதனைத் தொடா்ந்து, 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கும் ஜனவரி 3ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனை அடுத்து, பள்ளிகளில் பயிலும் 15 முதல் 18 வயதுக்குள்பட்டோரின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 395 பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் விவரம் சேரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 57,700 மாணவா்கள் 10 முதல் 12ஆம் வகுப்புகளில் பயின்று வருவதாக தெரியவந்துள்ளது. இதேபோல் பள்ளிக்குச் செல்லாத சிறாா்களின் விவரங்களை சேரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.