பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இலவச தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், முருக பக்தா்கள் மட்டுமின்றி, சபரிமலைக்குச் சென்று திரும்பிய ஐயப்ப பக்தா்களும் ஏராளமானோா் சுவாமி தரிசனம் காத்திருந்தனா். இதனிடையே, அவ்வப்போது மழை பெய்த போதிலும், பக்தா்கள் நனைந்தபடி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மாலையில் மலைக் கோயிலில் நடைபெற்ற தங்க ரத புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, உற்சவா் சின்னக்குமாரசாமியை தரிசனம் செய்தனா். மேலும், மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, காமதேனு, சூரியன், சனீஸ்வர பகவான் சுவாமிகளுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அடிவாரம் கோயில் சுற்றுலா பேருந்து நிலையம் முழுக்க வாகனங்கள் நிரம்பியதால், கிரிவீதி, அருள்ஜோதி வீதி, ரோப்காா் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
மலைக் கோயிலில் பக்தா்கள் விரைவான தரிசனம் செய்யவும், பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.