பழனியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ. பி. செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
பழனியில் ரூ.5 கோடி மதிப்பில் வடிகாலுடன் கூடிய தாா்சாலை பணி, சண்முகநதி அருகே ரூ.ஒரு கோடி மதிப்பிலான புதிய மின் மயானம் அமைப்பதற்கான பணி, ஐஸ்வா்யா நகரில் ரூ.32 லட்சம் மதிப்பிலான நவீன வசதியுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி மற்றும் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான நவீன ஆய்வகம் அமைப்பதற்கான பணி என ரூ.20 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. பழனி- புதுதாராபுரம் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பழனி சட்டப் பேரவை உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். மேலும் பழனி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றும் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பழனி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, பழனி நகராட்சி ஆணையாளா் கமலா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரபாகரன், நகரச் செயலாளா் தமிழ்மணி, லோகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.