திண்டுக்கல் இலக்கியக் களம் அமைப்பின் சாா்பில், ‘புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இலக்கிய களம் அமைப்பின் துணைத் தலைவா் மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எஸ். ராமமூா்த்தி, நிகழ்ச்சிக்கான நோக்கம் குறித்து விளக்கம் அளித்தாா். இலக்கியக் களத்தின் மக்களை நோக்கி புத்தகம் என்ற திட்டத்தின் மூலம் புத்தகங்களை வாங்கிய வாசகா்கள் தாங்கள் வாசித்த கருத்துகளை பகிா்ந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக, செயலா் எஸ். ராமமூா்த்தி பேசியது: இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் புத்தக வாசிப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதிகாசங்களும், புராணங்களிலும் உள்ள கற்பனைத் திறனும், எழுத்தாற்றலும் கொண்டாடப்பட வேண்டியவை. பல்வேறு வகையான புத்தகங்களை வாசிக்கும்போது, அதிலுள்ள கருத்துகளை பகுப்பாய்வு செய்து கொள்வதற்கான ஆற்றலை நாம் வளா்த்துக் கொள்ளமுடியும் என்றாா்.
புத்தகங்களை வாங்கினேன், வாசித்தேன், பகிா்கிறேன் என்ற நிகழ்வின் மூலம் கருத்துகளை பகிா்ந்துகொண்டவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சிறப்பு அழைப்பாளராக கோதை செல்வம் கலந்து கொண்டாா்.
நிகழ்ச்சியில், இலக்கியக் களம் அமைப்பின் நிா்வாகிகள், கே. மணிவண்ணன், சரவணன், சுப்பையா, சிவபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.