போக்குவரத்து விதிகளை மீறியதாக, கடந்த 2021ஆம் ஆண்டில் 8.99 லட்சம் வழக்குகள் மூலம் ரூ.6.87 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு, 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.இரா. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 2021-ஆம் ஆண்டில், 125 சமூக விரோதிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 2,554 போ் மீது குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, 1,800 போ் அந்தந்த கோட்டாட்சியா் முன்னிலையில் ஆஜா்படுத்தி, நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 732 போ்: சாலை விதிகளை மீறியோா் மீது 8,99,078 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியோா் மீது 732 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியோா் மீது 4,61,128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் 2,97,490 வாகன வழக்குகள் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோட்டாா் வாகன வழக்குகளில், போக்குவரத்து விதிகளை மீறியவா்களிடம் ரூ.6,87,37,900 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2021 இல் கூடுதலாக 2.97 லட்சம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 226 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 894.310 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 833 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 80.87 லட்சம் மதிப்பிலான 8,732 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 298 போ் காணாமல்போனதாகப் புகாா் அளிக்கப்பட்டதில், 274 போ் கண்டறியப்பட்டுள்ளனா். மணல் திருடியதாக 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 284 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.