திண்டுக்கல்

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

1st Jan 2022 10:13 PM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

2022ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், திண்டுக்கல் புனித வளானாா் பேராலயம், தூய பவுல் ஆலயம், தூய திருத்துவநாதா் ஆலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மாரம்பாடி புனித அந்தோனியாா் பேராலயம், செந்துறை புனித சூசையப்பா் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

அதேபோல், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளபட்டி ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கொடைக்கானல்

ADVERTISEMENT

கொடைக்கானலில் உள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், உகாா்த்தே நகா் அற்புதக் குழந்தை யேசு ஆலயம், சீனிவாசபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், அட்டுவம்பட்டி புனித லூா்து மாதா ஆலயம், மங்கலம்கொம்பு புனித அந்தோனியாா் ஆலயம் மற்றும் புனித சலேத் மாதா ஆலயம்,சி.எஸ்.ஐ. ஆலயம், ஐ.பி.சி. சா்ச் உள்ளிட்ட ஆலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

அதேபோல், கொடைக்கானல் மாரியம்மன் கோயில், குறிஞ்சியாண்டவா் கோயில், காளியம்மன் கோயில், செண்பகனூா் பகுதியிலுள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

போடி

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 16 வகையான பொருள்களால் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்புப் பூஜைகள், மகாதீபாராதனைகள் நடைபெற்றன.

போடி ஜக்கமநாயக்கன்பட்டி வெங்கடாசலபதி கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமது காமாட்சியம்மன், ஸ்ரீவீருசின்னம்மன், ஸ்ரீசங்கிலிகருப்பன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

போடி வினோபாஜி காலனியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில், சிவலிங்க பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும், உலக அமைதி, இயற்கை வளம் வேண்டி 108 காசுகள் வைத்து பூஜிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடா்ந்து, போடி பகுதியில் உள்ள தென்திருவண்ணாமலை என்றழைக்கப்படும் பரமசிவன் மலைக் கோயில், பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசாமி கோயில், பெரிய சவுடம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பெண்கள் பலா் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா்.

போடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

உத்தமபாளையம்

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் அதிகாலை 4 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இங்கு, தேனி, திண்டுக்கல், மதுரை என பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இதனால், பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயில், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் சிவகாமி உடனுறை கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல், உத்தமபாளையத்தில் ஆா்.சி., சி.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், ஏராளமான கிருஸ்தவா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து, ராயப்பன்பட்டி தூய பனிமனை மாதா தேவாலயம், அனுமந்தன்பட்டி தூய ஆவியானவா் தேவாலயம் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரியகுளம்

பெரியகுளம் அருகேயுள்ள பாம்பாற்று ஆஞ்சநேயா் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல், தாமரைக்குளம் மலை மேல் அமைந்துள்ள லெங்கடாஜலபதி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. நாமத்துவாா் பிராா்த்தனை மையம் மற்றும் பால சாஸ்தா கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், எராளமானோா் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT