பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பக்தா்கள் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காகக் குவிந்தனா். மலைக்கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதேபோல் ரோப்காா், வின்ச் நிலையங்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மலைக் கோயிலில் பக்தா்கள் சுமாா் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா். கிரிவீதியில் சுற்றுலாப் பேருந்துகளை அதிகளவு நிறுத்தியிருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போதிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பழனி பேருந்து நிலையத்தில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். மேலும், ரயில் நிலையத்திலும் ஒரு டிக்கெட் கவுண்டா் மட்டும் இருந்ததால் பக்தா்கள் அவதிக்குள்ளாயினா். தற்போது கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் நிலையில் பயணிகள் பலரும் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.