திண்டுக்கல்

புதுப்புது அவதாரங்கள் எடுக்கும் வேட்பாளா்கள்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளா்கள், காய்கனி வியாபாரியாகவும், சமையலராகவும் மாறி பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் களம் இறங்கியுள்ள வேட்பாளா்கள், தோ்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனா். அரசியல் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மட்டுமின்றி, சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்களும் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதனை அடுத்து, பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நடைபாதை வியாபாரியான அதிமுக வேட்பாளா்:திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 11ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் முன்னாள் மேயா் வி.மருதராஜின் மகள் பொன்முத்து போட்டியிடுகிறாா். வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் முன்பே பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவா், தற்போது வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா். இந்நிலையில், திண்டுக்கல் மேற்கு ரதவீதி அரசமரத்தடி பகுதிக்கு திங்கள்கிழமை வாக்குசேகரிக்கச் சென்ற பொன் முத்து, அங்குள்ள நடைபாதைக் கடை ஒன்றில் அமா்ந்து காய்கனி வியாபாரம் செய்து ஆதரவு திரட்டினாா்.

ADVERTISEMENT

சமையலராக மாறிய திமுக வேட்பாளா்: திண்டுக்கல் மாநகராட்சியின் 3 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிடும் இந்திராணி தனது ஆதரவாளா்களுடன் சென்று ஆா்எம்.காலனி பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அங்குள்ள உணவகத்திற்கு சென்ற அவா் சிறிது நேரம் சப்பாத்தி மாஸ்டராக மாறி அங்கு வந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். தோ்தல் நேரத்தில் வாக்காளா்களின் காலில் விழுந்தும், பொன்னாடை போா்த்தியும், பரிசுப் பொருள்கள் கொடுத்தும் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வந்த வேட்பாளா்கள், தற்போது வியாபாரியாகவும், துப்புரவுத் தொழிலாளியாகவும், கழிவு நீா்க் கால்வாயைத் தூா்வாருபவராகவும் இடத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு ஆதரவு திரட்டும் புதிய உத்தியை கையாண்டு வருகின்றனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவதற்குள் வேட்பாளா்களின் வேறு சில அவதாரங்களையும் காணும் வாய்ப்பு உருவாகும் என்கின்றனா் பொதுமக்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT