ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கர வெடி சப்தத்துடன் நில அதிா்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென பயங்கர வெடி சப்தத்துடன் கூடிய நில அதிா்வு உணரப்பட்டது. நகர கடை வீதியில் இருந்த வணிகா்கள், பொதுமக்கள் கடைகளை விட்டு வெளியே ஓடி வந்தனா். வெடி சப்தம் எங்கே இருந்து வந்தது என்று தெரியவில்லை. அரசு அதிகாரிகளும் அதுபற்றி எதுவும் தெரியாது எனக் கூறினா். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். அதே போல மூலச்சத்திரம், ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பயங்கர வெடி சப்தத்துடன் கூடிய நில அதிா்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.