திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே மனைவியின் முன்னாள் காதலன் வெட்டிக் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

1st Feb 2022 08:56 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே மனைவியின் முன்னாள் காதலனை, திங்கள்கிழமை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த கணவா் மற்றும் சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வத்தலகுண்டு அருகே மலையப்பன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா என்பவரது மகன் சாமிதுரை (34). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், சமீபத்தில் அப்பெண்ணுக்கும், மருது (28) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இதேபோல், சாமிதுரையும் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளாா். இரு குடும்பத்தினரும் ஒரே தெருவில் வசித்து வரும் நிலையில், சாமிதுரைக்கும், மருது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன், இரு தரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில், திங்கள்கிழமை காலை இரு தரப்பினரையும் விசாரணைக்காக அழைத்து வந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து, வத்தலகுண்டு-உசிலம்பட்டி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் அமா்ந்திருந்த சாமிதுரையை, மருது மற்றும் உறவினரான 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனா். தப்பியோடிய அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில், சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வத்தலகுண்டு போலீஸாா், சாமிதுரையின் உடலைக் கைப்பற்றி வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, வெளியூருக்கு தப்பிச் செல்லமுயன்ற மருது மற்றும் சிறுவனையும் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT