பழனி அருகே தனியாா் பள்ளிப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பழனியை அடுத்த சத்திரப்பட்டி புதுக்கோட்டையில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தை பழுது நீக்குவதற்காக ஓட்டுநா் துரைராஜ் பணிமனைக்கு ஓட்டிச் சென்றாா்.
திண்டுக்கல் சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சிந்தலவாடம்பட்டி என்ற இடத்தில் திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. ஓட்டுநா் துரைராஜ் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினாா்.
இதுகுறித்து, ஆயக்குடி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.