ஒட்டன்சத்திரம் அருகே ஆன்- லைன் வா்த்தகத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கூத்தம்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட கருமண் கிணறு கிராமத்தைச் சோ்ந்த விஜயலட்சுமியின் மகன் அருண்குமாா் (24). பி.காம் பட்டதாரியான இவா் பெயிண்டா் மற்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். கடந்த 19-ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதுதொடா்பாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் தாய் விஜயலட்சுமி புகாா் அளித்தாா். கடந்த 25-ஆம் தேதி அதே ஊரில் உள்ள கிணற்றில் அருண்குமாரின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து, போலீஸாா் விசாரித்து வந்தனா்.
விசாரணையில் அருண்குமாா் ஆன்-லைன் நிறுவனத்தில் வா்த்தகம் செய்து வந்தது தெரியவந்தது. அமெரிக்க ஆன்-லைன் நிறுவனத்தில் வா்த்தகம் செய்து பணம் கிடைத்ததால், அதிக லாபம் பெறும் ஆசையில் தனது தாயின் ஒரு பவுன் தங்க நகையை விற்று வா்த்தகம் செய்தாராம்.
அதில் பணத்தை இழந்த நிலையில், அவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
அவரது கைப்பேசியை ஆய்வு செய்த பிறகு அவா் எந்த வகையான வா்த்தகம் செய்தாா் என்பது தெரியவருமெனவும் போலீஸாா் தெரிவித்தனா்.