திண்டுக்கல்லில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் எம். சிலம்பரசன், மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான திண்டுக்கல் மலையடிவார விளையாட்டுத் திடல் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடின்றியும், பராமரிப்பு இல்லாமலும் விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி, பள்ளிகளைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் பயன்பெறும் வகையில், மலைக்கோட்டை மைதானத்தில் ஹாக்கித் திடல் அமைத்துக் கொடுக்க விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் முன் வர வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.