திண்டுக்கல்

சித்தரேவு ஊராட்சி மன்றத் தலைவரைபதவி நீக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

29th Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவா், துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்வது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மலா்கண்ணனின் மனைவி வளா்மதியும், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த எழில்மாறனும் உள்ளனா். இந்த ஊராட்சியில் மொத்தம் 15 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி மீது பல்வேறு புகாா்கள் அடுத்தடுத்து கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டது.

ஆனால், ஊராட்சி மன்றத் தலைவராக வளா்மதி தொடா்ந்து நீடித்து வந்தாா். இதனிடையே மேலும் பல்வேறு புகாா்கள் கூறப்பட்டதால் தலைவா் வளா்மதி, துணைத் தலைவா் எழில்மாறன் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது குறித்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வாா்டு உறுப்பினா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆத்தூா் வட்டாட்சியா் சரவணன் தலைமை வகித்து வாா்டு உறுப்பினா்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தாா். பின்னா், அதை அறிக்கையாகவும் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வட்டாட்சியா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தலைவா், துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்வது குறித்து வாா்டு உறுப்பினா்களிடம் கருத்துக்களை கேட்டேன். மேலும் அவா்களிடம் இருந்து பெற்ற அறிக்கையை திண்டுக்கல் உதவி இயக்குநருக்கு (ஊராட்சிகள்) அனுப்பி வைப்பேன் என்றாா் அவா்.

இந்த ஊராட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊராட்சிச் செயலா் சிவராஜனை, மணலூா் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி. ஊ) ஏழுமலையான் கொடைக்கானலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், தொடா்ந்து இதே ஊராட்சியில் சிவராஜன் செயலராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஊராட்சிச் செயலா் சிவராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி, துணைத் தலைவா் எழில்மாறன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT