பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் பழனிக் கோயில் தைப்பூசத் திருவிழா சிறப்பு ஆலோனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் ஜனவரி 27- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் ஜன. 29- ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தற்போதே பாதயாத்திரை பக்தா்கள் வரத் தொடங்கியுள்ளனா். ஆனால் இதுவரை எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்பட வில்லை. இந்த நிலையில் பழனிக் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தா்கள் பாதுகாப்பாக வந்து செல்ல செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சசிக்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சிவசக்தி (பழனி), முருகேசன் (ஒட்டன்சத்திரம்) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பாதயாத்திரை பாதையை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைந்து சீரமைப்பது, சாலையில் வரும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிப்பது, ஒளிரும் பட்டைகளுடன் கூடிய குச்சிகளை பக்தா்களுக்கு வழங்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.