கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இங்கு நகா்ப் பகுதி, புகா்ப் பகுதி, வனப் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இவற்றை நிறுத்த போதுமான இடவசதி இல்லை.
இதில் கலையரங்கம் பகுதி, ஏரிச் சாலை நேரு சிலைப் பகுதிகளில் மட்டும் கட்டண வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. ஆனால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் நாள்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனா்.
எனவே கொடைக்கானலில் வாகன நிறுத்தம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் பெருமாள்மலையிலிருந்து அப்சா்வேட்டரி வரை சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மூஞ்சிக்கல், கல்லறைமேடு பகுதி, ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி சாலைகளில் பல்வேறு காரணங்களால் சாலைகள் அகலப்படுத்த முடிய வில்லை. அகலப்படுத்தப்பட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் கொடைக்கானலில் பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. சாலைகளை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருந்தாலே போக்குவரத்துக்கு பிரச்னை இருக்காது என்றாா் அவா்.