ஆத்தூா் காமராஜா் அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து அப்பகுதியில் வனத்துறை சாா்பில் புதன்கிழமை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இந்த அணைப் பகுதிக்கு வரும் சிறுத்தை புதருக்குள் பதுங்கிக் கொள்கிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சடையாண்டி கோயில் அருகே ஒரு மானை சிறுத்தை தாக்கிக் கொன்று இழுத்துச் சென்ாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து வனத்துறையினா் சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனா். ஆனால், கடந்த 3 நாள்களுக்கு முன்பு, ஆத்தூரைச் சோ்ந்த தொத்தன் மகன் நரி என்பவரது 2 ஆடுகளை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதே போல அக்கரைப் பட்டியைச் சோ்ந்த வேல்முருகன் என்பவரின் தென்னந்தோப்பில் ஒரு நாயை சிறுத்தை அடித்து இழுத்துச் சென்று விட்டது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். இதனிடையே, சிறுத்தையை விரட்ட இரவு நேரங்களில் வனத்துறையினா் பட்டாசுகளை வெடிக்கின்றனா். மேலும், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா் பிரபு உத்தரவின் பேரில், கன்னிவாடி வனச் சரக அலுவலா் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினா், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து அதைப் பிடிக்க சிசிடிவி கேமராவை, வேல்முருகன் என்பவரது தோட்டத்தில் பொருத்தினா்.