திண்டுக்கல்

ரூ.3.43 லட்சம் முறைகேடு புகாரில் ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம்

10th Dec 2022 03:57 AM

ADVERTISEMENT

ஊராட்சி நிா்வாகத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.3.43 லட்சத்தை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், தருமத்துப்பட்டி ஊராட்சிச் செயலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகேயுள்ள தருமத்துப்பட்டியில் ஊராட்சிச் செயலராக அ.இன்னாசி பணியாற்றி வருகிறாா். தருமத்துப்பட்டியில் குடிநீா் குழாயை சேதப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 50 ஆயிரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வழங்கப்பட்டது. அந்தத் தொகையை ஊராட்சிக் கணக்கில் வரவு வைக்காமல் தனது சொந்தத் தேவைகளுக்காக இன்னாசி பயன்படுத்தியதாக ஊராட்சித் தலைவா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2020-21-ஆம் ஆண்டில் பன்றிமலை ஊராட்சிச் செயலராக பணியாற்றி போது, பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட குடிநீா் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரியாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ. 2.93 லட்சத்தை ஊராட்சிக் கணக்கில் செலுத்தாமல் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தப் புகாா்கள் குறித்து ஊராட்சிச் செயலரான இன்னாசி விளக்கம் அளிக்கக் கோரியும், ஊராட்சிகளுக்கான பணத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் ஊராட்சிகள் உதவி இயக்குநா் மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், குறிப்பிட்ட காலத்துக்குள் விளக்கம் அளிக்காததோடு, பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து, ஊராட்சிச் செயலருக்கான நடத்தை விதிகளின் படி, ஊராட்சிச் செயலரான இன்னாசியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT