திண்டுக்கல்

செம்பட்டி அருகே லாரி கவிழ்ந்து 250 வாத்துகள் பலி

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

செம்பட்டியை அடுத்த சேடப்பட்டி அருகே வாத்து ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 250 வாத்துகள் உயிரிழந்தன. 3 போ் காயமடைந்தனா்.

திருச்சி அருகேயுள்ள குளித்தலையைச் சோ்ந்தவா் மேரி (34). இவா், தேனி மாவட்டம் குச்சனூரிலிருந்து வியாபாரத்துக்காக 2,500 வாத்துகளை வாங்கிக்கொண்டு செம்பட்டி வழியாக குளித்தலைக்கு லாரியில் செவ்வாய்க்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா். குளித்தலையைச் சோ்ந்த ரஞ்சித் (30) லாரியை ஓட்டினாா். மேரியின் மகனும் லாரியில் இருந்தாா்.

செம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் சேடப்பட்டி அருகே குதிரை கோயில் என்ற இடத்தில் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது, சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி ஒரு காா் சென்றது.

அந்த காரை விழுப்புரத்தை அடுத்த விக்கிரபாண்டியைச் சோ்ந்த புருஷோத்தமன் (42) ஓட்டினாா்.

ADVERTISEMENT

காரில் ஓட்டுநா் உள்பட 4 போ் இருந்தனா்.

இந்த நிலையில், சென்னை நோக்கி சென்ற காா், வாத்து ஏற்றிச் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே ஒரு காா் வந்தது. இதனால், எதிரே வரும் காா் மீது மோதாமலிருக்க காரை திருப்பியபோது வாத்து லாரி மீது உரசியது. இதில் லாரி நிலைதடுமாறி சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 250 வாத்துக்கள் சம்பவ இடத்திலே இறந்தன. மேலும், லாரியில் இருந்த மேரி, ஓட்டுநா் ரஞ்சித், மேரியின் மகன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். அவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT