நிலக்கோட்டை அருகே ஆடு, மாடுகளை திருட முயன்ற கேரள இளைஞரை பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனா். கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மணியக்காரன்பட்டியில் சாலையோரம் உள்ள தனியாா் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடுகளை திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் திருட முயன்றாா். அப்போது, மடக்கிப் பிடிக்க முயன்ற விவசாயிகளை அவா் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அப்பகுதியில் நின்றிருந்த காா் கண்ணாடிகளை உடைத்து அந்த நபா் தப்பியோட முயன்றாா். அவரை சுற்றிவளைத்து பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை போலீஸாா் நடத்தி ய விசாரணையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்த முகமது பைசல் (27) எனபதும், இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், மணியக்காரன்பட்டியைச் சோ்ந்த முத்தையா (27) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முகமது பைசலைக் கைது செய்தனா்.