திறன்மிகு விளையாட்டு வீரா்கள் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கு டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை (எலைட்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள்:
மாநில, தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் 5 போ் பயன்பெறலாம். இதற்கு, கடந்த 2-ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவை) பங்கேற்றிருக்க வேண்டும்.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில்
பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் 50 போ் (5 மாற்றுத்திறனாளிகள் உள்பட) பயன்பெறலாம். வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்பட 100 போ் பயன்பெற முடியும். அரசின் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வென்ற 20 வயதுக்குள்பட்ட வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
எலைட் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், எம்ஐஎம்எஸ் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரையிலும், சிடிஎஸ் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.
இத்திட்டங்களில் சோ்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை 15.12.2022 மாலை 5 மணி வரை சமா்பிக்கலாம். ஏற்கெனவே அஞ்சல் வழியிலோ, நேரடியாகவா விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.