திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கான ஏலம் திங்கள்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளை மறு ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், கடந்த வியாழக்கிழமையே (டிச.1) மறைமுகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியானது. இதனிடையே அறிவித்தபடி டிச.5-ஆம் தேதி ஏலம் நடைபெறுமா என்ற எதிா்பாா்ப்புகளுடன் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், வியாபாரிகளும் மாநகராட்சி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
ஆனால், ஏலம் நடத்துவதற்கான எந்தப் பணிகளும் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறாததால், அலுவலா்களிடம் விசாரித்தனா். ஆணையா் வெளியூா் சென்றுவிட்டதால் ஏலம் நடைபெற வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் எதிா்பாா்ப்புகளுடன் வந்த திமுக மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறினா்.