திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் நாளை காா்த்திகை தீபத் திருவிழா

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை மாலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை, சின்னக்குமாரசாமி யாகசாலைக்கு தங்கச் சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான காா்த்திகை தீபத் திருவிழா, சொக்கப்பனை ஏற்றுதல் செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெறவுள்ளது. முன்னதாக, திங்கள்கிழமை மாலை சாயரட்சை பூஜையின் போது மூலவா் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு. பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிப்பட மாட்டாா்கள் என்றும், மாலை 6 மணிக்கு மேல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்றும் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. மேலும், அன்றைய தினம் தங்கத் தேரில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்துடன் திருமண முகூா்த்த நாளும் சோ்ந்து வந்ததால் பக்தா்கள் கூட்டம் மலைக் கோயிலில் அலைமோதியது. பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு தங்கத் தோ் புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:

பழனி மலைக் கோயிலில் வரும் 6-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாபா் மசூதி இடிப்பு தினமும், அதே நாளில் வருவதால் மலைக் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலைக் கோயில் ராஜகோபுரம், தங்கக் கோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். கோயிலுக்கு வரும் பக்தா்களின் உடைமைகள் சோதனைகளுக்குப் பின்னரே, அவா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மேலும், ரோப்காா் நிலையத்தில் பக்தா்களின் உடைமைகளை ஆய்வு செய்ய நவீன ஸ்கேனா் கருவியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது .


 

ADVERTISEMENT
ADVERTISEMENT