திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 34 கடைகளுக்கு மறைமுக ஏலம் நடத்தினால் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: பாஜக எச்சரிக்கை

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு வருகிற 5-ஆம் தேதி மறைமுக ஏலம் நடத்தினால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி. தனபாலன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளை ஏலம் விடுவது தொடா்பாக முறையான வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தியும், வெளிப்படைத் தன்மையோடு ஏலம் நடத்தக் கோரியும் ஆணையா் சிவசுப்பிரமணியனை சந்தித்து பாஜகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பின்னா் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி. தனபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் நகர மக்களும், மாமன்ற உறுப்பினா்களும் அறிந்து கொள்ளும் வகையில் 34 கடைகளை ஏலம் விடுவது தொடா்பாக குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு முன்பு வெளிப்படையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஒரு கடைக்கு எத்தனை நபா்கள் பணம் கட்டினாலும், அத்தனை நபா்களையும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வருகிற 5- ஆம் தேதி முறைகேடாக அறிவிக்கப்பட்ட 34 கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

ADVERTISEMENT

திண்டுக்கல் காந்தி சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வருவாய் கிடைத்து வந்த நிலையில், ஏலம் எடுத்தவருக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு திமுக பிரமுகா் ஒருவருக்கு விதிமுறைகளை மீறி பணம் வசூலிக்க உரிமம் வழங்கப்பட்டது. நாளொன்றுக்கு ரூ. 23ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சிக்கு சுமாா் ரூ.5 ஆயிரம் மட்டுமே செலுத்தப்படுகிறது.

நாள்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீா், தற்போது 2 நாள்களுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது. குடிநீா் வடிகால் வாரியத்துக்கான கட்டணம் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனா். மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய், தனிநபா்கள் பயன்பெறும் வகையில் மடைமாற்றம் செய்யப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது. வருகிற 5-ஆம் தேதி 34 கடைகளுக்கு மறைமுகமாக ஏலம் நடத்தினால், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இங்கு நடைபெறும் முறைகேடுகளை பொதுமக்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT