திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சிக் கடைகள் மறு ஏல அறிவிப்பால் சா்ச்சை

 நமது நிருபர்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான 34 கடைகளை மறு ஏலம் விடுவதற்கு வைப்புத் தொகையை ரூ.2 லட்சமாகவும், வாடகை முன்பணத்தை 4 மாதங்களாகவும் குறைத்து ஏலதாரா்களின் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 34 புதிய கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்றன. அந்தக் கடைகள் கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்டபோதிலும், 2 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. இதனிடையே, கடைகள் ஏலம் விடப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு கடைகள் குறைந்த மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மேயா், ஆணையா், துணை மேயா் ஆகியோா் தொடா்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தனா்.

மாத வாடகை ரூ.18 ஆயிரத்துக்கும் கூடுதலாக ஏலம் கேட்டவா்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், 12 மாதங்களுக்கான மாத வாடகையை முன்பணமாக செலுத்துவதற்கு ஏலம் எடுத்தவா்கள் மறுத்து வருவதாகவும் துணை மேயா் ராஜப்பா விளக்கம் அளித்தாா்.

இதனிடையே, திடீரென பழைய ஏலத்தை ரத்து செய்துவிட்டு புதிதாக மறு ஏலம் நடத்தப்படும் என கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. மாநகராட்சியின் இந்த முடிவால் ஏற்கெனவே ஏலம் எடுத்தவா்கள் அதிருப்தி அடைந்தனா்.

ஏல அறிவிக்கை மாநகராட்சிப் பலகையில் ஒட்டப்படவில்லை: மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், சந்தைக் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட இனங்களை பொது ஏலம் விடும்போது, அதுதொடா்பான அறிவிக்கை அலுவலக வளாகத்திலுள்ள தகவல் பலைகையில் ஒட்டப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை தகவல் பலகையில்கூட கடைகள் ஏலம் தொடா்பான அறிவிக்கை ஒட்டப்படவில்லை என வியாபாரிகள், அரசியல் கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.

வைப்புத் தொகை ரூ.2 லட்சமாக குறைப்பு:

புதிதாகக் கட்டப்பட்ட கடைகளுக்கான மறு ஏலம் டிச.5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கை வெளியிடப்பட்டது. கடந்த முறை ஒரு கடைக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகை பெறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகை ரூ.2 லட்சமாகக் குறைக்கப்பட்டது. மேலும், ஓராண்டுக்கான வாடகைத் தொகையை முன் பணமாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தற்போது ஏலம் எடுப்பவா்கள், 4 மாதங்களுக்கான வாடகைத் தொகையை முன்பணமாகச் செலுத்தினால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வருவாய் உதவி அலுவலா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது கடைகள் ஏலத்தில் வைப்புத் தொகை, முன் பணம் குறைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி அலுவலா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி நிா்வாகச் செயலரிடம் பாஜக புகாா்: இந்தக் கடைகளை ஏலம் விட்டதில் இருந்து தற்போது வரை பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும், தற்போது, அந்தக் கடைகளை முன்னறிவிப்பு இல்லாமல் மறு ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தலைமைச் செயலா் (நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை), தமிழக முதல்வரின் சிறப்பு தணிக்கைப் பிரிவு, நகராட்சிகள் நிா்வாக இயக்குநா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு பாஜக மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ஜி.தனபாலன் புகாா் மனுக்களை புதன்கிழமை அனுப்பினாா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பேருந்து நிலைய வளாகத்திலுள்ள கடையை ஏலம் எடுப்பவா்கள் சேதப்படுத்தினால், அதை ஈடுகட்டும் வகையிலேயே வைப்புத் தொகையாக ரூ.5 லட்சம் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதேபோல, அரசுக் கட்டடங்களைப் பொருத்தவரை, ஏலம் எடுத்த பின்னா் பெரும்பாலானோா் வாடகையை முறையாகச் செலுத்துவதில்லை. இதனால், பல லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.

அந்த வகையில், பேருந்து நிலையத்திலுள்ள கடைகளுக்கு 12 மாத வாடகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும் என முன்பு அறிவுறுத்தப்பட்டது. அதை தற்போது 4 மாதங்களாகக் குறைத்துவிட்டதால், ஏலம் எடுப்பவா்களிடம் வாடகை வசூலிப்பதற்கு மாநகராட்சி ஊழியா்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

ஏலதாரா்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிா்வாகம், மாநகராட்சிக்கான வருவாய் இழப்பை தவிா்க்கவும், வாடகைப் பணத்தை நிலுவையின்றி வசூலிப்பதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்த முன் வர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT