திண்டுக்கல்

இளைஞா் கொலை: தங்கையின் காதலா் கைது

1st Dec 2022 02:25 AM

ADVERTISEMENT

நத்தம் அருகே இளைஞரைக் கொலை செய்ததாக, அவரது தங்கையின் காதலரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள காசம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகன் ஜோதி (27). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவா், தனது தங்கையின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா். அழகா்கோயில் மலையடிவாரத்திலுள்ள தங்களது தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜோதி, செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுதொடா்பாக, நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். காவல் ஆய்வாளா் தங்க முனியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சின்னக்காளையின் மகன் பிரபாகரன் (30) என்பவா் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக, போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ADVERTISEMENT

ஜோதியின் தங்கையை தேங்காய் வெட்டும் தொழிலாளியான பிரபாகரன் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளாா். ஆனால், ஜோதி வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்து டிச.5-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளாா். இதனால், அதிருப்தியடைந்த பிரபாகரன், தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஜோதியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பிரபாகரன், ஜோதியை வெட்டிக் கொலை செய்துள்ளாா் என்றனா்.

இந்தக் கொலை தொடா்பாக துரிதமாக விசாரித்து குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பாராட்டுத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT