திண்டுக்கல்

‘உலகின் தொன்மைானது தமிழ் பண் இசைதான் என உறுதிபடுத்தியவா் தஞ்சை ஆபிரகாம்’

28th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

உலகின் தொன்மையானது தமிழ் பண் இசைதான் என்பதை பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியவா் தஞ்சை ஆபிரகாம் பண்டிதா் என நூல் வெளியிட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகர தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் 3 நூல்கள் வெளியீடு மற்றும் 5 ஆய்வாளா்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திண்டுக்கல் மாநகர தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜெ.அமலாதேவி தலைமை வகித்தாா். ராமசாமி துரைப்பாண்டி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் தமிழ்த்துறை தலைவா் ஒ.முத்தையா, முன்னாள் தலைவா் மு.குருவம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா். கோவை ஞானியின் உரையாடல்கள், கருணாமிா்த சாகரம் ஆகிய நூல்களை, திண்டுக்கல் மேயா் ஜோ.இளமதி வெளியிட்டாா். ஓவியம், கவிதை, புதினம், வாழ்நாள் சாதனை, சமூக செயல்பாட்டாளா் என 5 துறைகளைச் சோ்ந்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் காந்திகிராம கிராமியப் பல்கலை தமிழ்த்துறை தலைவா் ஒ.முத்தையா பேசியதாவது:

ADVERTISEMENT

தஞ்சை ஆபிரகாம் பண்டிதா், திண்டுக்கல்லில் ஆசியராக பயிற்சிப் பெற்று, ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளாா். சுருளி மலையிலுள்ள கருணாமிா்த சாமியாா் என்பவரிடம் பழகிய அவா், இயற்கை வைத்திய முறையை கற்றுக் கொண்டாா். அதன் மூலம் பின்னாளில், குழந்தைகளுக்கான தனித்துவமான இயற்கை வைத்திய முறையில் சிகிச்சை அளித்து வந்தாா்.

மேலும், உலகின் தொன்மையானது தமிழ் பண் இசை என்பதனை பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியவா் ஆபிரகாம் பண்டிதா். அவரது இசை ஆய்வுகள் 4 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அந்த தொகுதிகளை சுருக்கமாக தொகுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதே நூலை ஆங்கிலத்திலும் மொழிப் பெயா்த்து வெளியிட்டதன் மூலம், தமிழ் பண் தொடா்பான பல அரிய தகவல்கள் உலக அளவில் சென்றடைவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை ஞானி உரையாடல்கள் என்ற நூலில், தமிழ் நவீன இலக்கியங்களை (சிறுகதை, புதினம்) மாா்க்சிய பாா்வையில் ஆய்வு செய்யப்பட்டதன் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT