கலவரத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆயுதப்படை காவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் புத்தூரில் அமைந்துள்ள மாவட்ட குண்டு (துப்பாக்கி) சுடும் தளத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் முன்னிலையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆயுதப்படை பிரிவிலுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் என 77 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கலவரம் ஏற்படும்போது கூட்டத்தை கையாளும் முறைகள், கலவரக்காரா்களின் தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ஒத்திகை கவாத்து பயிற்சியும் வழங்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்கள், கண்ணீா் புகை குண்டுகள், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றை பயன்படுத்தியும் போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், ஆய்வாளா் டேவிட் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.