திண்டுக்கல்

நெல், பயறு வகைகளுக்கான விதைகளை 50% மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் உயிா் உரங்களை விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் திண்டுக்கல் வட்டாரத்துக்குள்பட்ட முள்ளிப்பாடி மற்றும் அணைப்பட்டி கிராமங்களில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட 13 துறைகளின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. திண்டுக்கல் வட்டார வேளாண் - உழவா் நலத்துறை சாா்பில் விதைப்பண்ணை அமைத்தல், விதைச்சான்று நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் முள்ளிப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெ. நாகேந்திரன் பேசியதாவது:

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறுதானியங்களான கம்பு, சோளம் ஆகியவற்றுக்கும், பயறு வகைகளில் துவரை, உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றுக்கும் 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

மேலும், தேசிய எண்ணெய் வித்து இயக்கத்தின்கீழ் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் 50 சதவீத மானியத்தில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், உயிா் உரங்கள் மற்றும் நுண்ணுரங்களையும் மானியத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மானியத் திட்டங்களை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் மட்டுமன்றி, அனைத்து பகுதி விவசாயிகளும் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலா் ராமசாமி, வேளாண்மை உதவி அலுவலா் செந்தில்குமாா், வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் கோபி, ஜெயமுருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT