திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 8 போ் காயம்

18th Aug 2022 02:46 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் அருகே தோட்ட வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்ற வாகனம் புதன்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்து 8 போ் காயமடைந்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியைச் சோ்ந்த பெண்கள் தினமும் சுமாா் 10 கி.மீ தூரமுள்ள கிளானவயல் அருகே உள்ள வண்ணாத்தி பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் மன்னவனூருக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை மணிகண்டன் (32) என்பவா் ஓட்டி வந்துள்ளாா். வண்ணாத்தி பகுதியைக் கடந்து வந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள சுமாா் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்திலிருந்த 7 பெண்கள், வாகன ஓட்டுநா் மணிகண்டன் ஆகிய 8 பேரும் காயமடைந்தனா்.

தகவல் அறிந்ததும் அப் பகுதியிலுள்ள மக்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு மன்னவனூா் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். இதில் கோமதி மற்றும் உஷா ஆகிய இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT