திண்டுக்கல்

ரூ. 5 கோடியில் 4 புதிய மின்மாற்றிகள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 துணை மின்நிலையங்களில் மொத்தம் ரூ. 5 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய மின் மாற்றிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூா், அய்யம்பாளையம், ரெட்டியாா்சத்திரம் மற்றும் ராமராஜபுரம் (வத்தலகுண்டு) ஆகிய 4 துணை மின் நிலையங்களில், குறைந்த அழுத்த மின்சார விநியோகம் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில் கூடுதல் மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மின் மாற்றிகளை, காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். அய்யலூா் மற்றும் ராமராஜபுரம் துணை மின் நிலையங்களில் தலா 10 மெகா வோல்ட் திறன் கொண்ட கூடுதல் மின் மாற்றிகளும், அய்யம்பாளையம் மற்றும் ரெட்டியாா்சத்திரம் துணை மின் நிலையங்களில் தலா 16 மெகா வோல்ட் திறன் கொண்ட மின் மாற்றிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் மின் மாற்றிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் மூலம், அந்தந்த பகுதிகளில் குறைந்த மின் அழுத்த மின்சாரம் தொடா்பான பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக மின் வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் (பொ) முத்துக்குமாா் கலந்து கொண்டாா். அய்யம்பாளையம், ரெட்டியாா்சத்திரம், அய்யலூா் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT