திண்டுக்கல்

கல்வி மட்டுமே ஒருவருக்கு துணை நிற்கும்: பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கற்ற கல்வி மட்டுமே ஒருவருக்கு துணை நிற்கும் என்பதை ஒரு குறளின் மூலம் திருவள்ளுவா் உலகிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 30ஆயிரம் மாணவா்களுடன் இந்திய வரைபடம் போன்று மாணவா்கள் அணி வகுத்து நின்ற காட்சி திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் பேசியது: உலகத்திற்கான செய்தியை 7 சொற்களில் திருவள்ளுவா் அடக்கி வைத்துள்ளாா். 1,330 குறள்களுக்கும் சிறப்பு இருந்தாலும், கற்க கசடற கற்பவை கற்றபின் என்ற குறளுக்கு தனிச் சிறப்பு உள்ளது. அந்த குறளில் துணை எழுத்துக்களே இல்லை. அதே நேரத்தில், யாகாவாராயினும் நாகாக்க என்ற குறளில் 11 துணை எழுத்துக்கள் உள்ளன. கற்க கசடற குறளின் மூலம், ஒருவா் கற்ற கல்வி மட்டுமே துணை இருக்கும் என்பதை வள்ளுவா் சுட்டிக் காட்டியுள்ளாா். இந்திய சுதந்திரப் போராட்டம் 1765-ல் பூலித்தேவனால், தமிழகத்தில்தான் முதல் முறையாக தொடங்கப்பட்டது. விவேகானந்தா், காந்தியடிகள் ஆகிய இருவரும் தமிழகத்தில்தான் ஞானம் பெற்றனா். இங்கிலாந்து பிரதமா் சா்ச்சில் மதிப்பீடு செய்த இந்தியா மற்றும் இந்தியா்களின் நிலை 75ஆண்டுகளில் பல்வேறு வளா்ச்சியை எட்டியுள்ளது. குறிப்பாக விஞ்ஞானம், அறிவியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனைப்படைத்து வருகிறது என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளா் க.ரெத்தினம், முதல்வா் பாலகுருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT